காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நினைவு தினம் இன்று!

0
6

சென்னை : திரையுலகில் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவரான காதல் மன்னனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ் ,இந்தி, தெலுங்கு , மலையாளம், கன்னடம் ஆகிய 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ஜெமினி கணேசன் 2005ம் ஆண்டு மார்ச் 22ம் திகதி உயிரிழந்தார். கருப்பு வெள்ளை காலத்திலேயே கலர்புல் நாயகனாக வலம் வந்த ஜெமினி கணேசனைப் பற்றி தெரியாத பல சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.

நடிகர் ஜெமினி கணேசன் 1920ம் ஆண்டு ராமசாமி ஐயர்,கங்கம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். மருத்துவர் ஆவதை லட்சியமாக வைத்திருந்த ஜெமினி கணேசன், கிறிஸ்துவ கல்லூரியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான முயற்சியில் இருந்தார். ஆனால், மருத்துவம் படிக்க வசதி இல்லாததால்,கிறிஸ்துவகல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

அதன்பின் சினிமாவில் இருந்த ஆர்வத்தால், அதில் இருந்து விலகி, ஜெமினி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தார் ஜெமினி கணேசன். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் புதுமுக நடிகர்களிடம் நேர்காணல் நடத்தி, அவர்களின் நடிப்பு திறமைபற்றி ஜெமினி ஸ்டுடியோவிற்கு தகவல் கொடுப்பது ஜெமினி கணேசனின் வேலையாகும். இப்படி வாய்ப்பு கேட்டு வந்தவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர் என்பது ஆச்சரியமான உண்மை.

1947ஆம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோ தயாரித்த மிஸ்.மாலினி என்ற திரைப்படத்தில் அறிமுக நடிகராக ஜெமினி கணேசனும், நாயகியாக புஷ்ப வள்ளியும் நடித்திருந்தனர். கணேசன் என்ற பெயரில் பல நடிகர்கள் இருந்ததால், இவருடைய பெயர் ஜெமினி கணேசன் என வைத்துக்கொண்டார். பின்னாளில் இந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என பெயர் எடுத்தார்.

ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் “மனம்போல மாங்கல்யம்”. இந்த படத்தில் தான் ஜெமினி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பெரும் வெற்றியடைந்த இப்படம், அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் மறக்க முடியாத படமாக அடைந்தது. இதில் தன்னுடன் நடித்த, சாவித்திரியை மணந்து கொண்டார்.

தன்னை காதல் மன்னன் என்று ரசிகர்கள் ஆசையோடு அழைப்பதை ரசித்த ஜெமினி கணேசன், தனது சொந்த வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவே இருந்தார். தனது 79வது வயதில், தன்னிடம் செக்ரக்டரியாக வேலை பார்த்த ஜூலியானா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதைப்பார்த்து பார்த்து வியந்த பலர் அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு, அவர், 82 வயதில் நெல்சன் மண்டேலா திருமணம் செய்து கொண்ட போது, அவரை விட மூன்று வயது சிறியவன் நான் திருமணம் செய்து கொள்ளக்கூடாதா என்று கேட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஜெமினி கணேசன் நடித்த பெரும்பாலான படங்களில், அதிரடி சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல், மெல்லிய காதல் காட்சிகள் மட்டுமே இருக்கும் என்பதால், இவருடைய படங்களை பெரும்பாலான ரசிகர்கள் சாம்பார் படம் என்றே அழைத்தனர். காதல் மற்றும் குடும்பக் கதைகளில் நடித்து பெயர் எடுத்த,ஜெமினி கணேசன் 2005ம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here