தேவைக்கேற்ப படையினரை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறு இராணுவத் தளபதியினால் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளின் சிறு ஊழியர் தொழிற்சங்ககளினால் சில கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை தடையின்றி தொடர்வதற்கு சுகாதார அமைச்சினால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேற்கு மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டிய, மகாமோதர, பேராதனை மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், மாத்தறை பலாங்கொடை, எஹெலியகொடை, நாவலப்பிட்டிய, பதுளை, கம்பளை, மீரிகம ஆகிய வைத்தியசாலைகளின் வழமையான நடவடிக்கைகள் தடையின்றி தொடர்வதற்கு இராணுவத்தினர் பணியமர்தப்பட்டுள்ளனர்.
இதுவரை அந்த வைத்தியசாலைகளின் தேவைக்கு ஏற்ப, இராணுவத்தின் சுமார் 500 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், அவசர தேவை ஏற்படும் பட்சத்தில், படைகளை அனுப்புவதற்கு தயார்படுத்துமாறும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களின் வழமையான நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள தேவையான சகல படிமுறைகளை எடுக்குமாறும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.