காணாமல் போயிருந்த இஸ்ரேலிய யுவதி மீட்பு!

0
4

திருகோணமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது காணாமல் போயிருந்த இஸ்ரேலிய யுவதி நிலாவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து விசாரணை குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாமர் அமிதாய் என்ற 25 வயதுடைய இஸ்ரேலிய யுவதி கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தார்.

பின்னர் ஒன்லைனில் ஒரு வாரத்திற்கு திருகோணமலையில் ஒரு ஹோட்டல் அறை ஒன்றினை அவர் முன்பதிவு செய்திருந்தார்.

எனினும் கடந்த 26ஆம் திகதி பிற்பகல் முதல் அவர் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் உப்புவெளி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உப்புவெளி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், உப்புவெளி பிரதேச சபை மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் என்பன இணைந்து யுவதியை கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை முன்னெடுத்தன.

நேற்று (29) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி நிலாவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரிடம் “அத தெரண” வினவிய போது, ​​குறித்த யுவதி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், குறித்த காட்டுப் பகுதிக்கு அவரே சென்றிருக்கலாம் என ஊகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் யுவதியிடம் இருந்து எவ்வித வாக்குமூலமும் கிடைக்கப்பெறாத நிலையில், அவர் தற்போது திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here