கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த கவிதை நூலில் இடம்பிடித்த கவிஞர் பொத்துவில் அஸ்மின் கவிதை!

0
14

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தொகுத்த “கலைஞர் 100 கவிதைகள் 100” கவிதை நூலின் அறிமுகவிழா அண்மையில் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு தொகுக்கப்பட்டுள்ள இத்தொகுப்பில் தமிழின் மிகச்சிறந்த 100 கவிஞர்களது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் கவிஞர்கள் எனப்போற்றப்படும் புரட்சி கவிஞர் பாரதிதாசன்,
கவியரசர் கண்ணதாசன், அ.மருதகாசி, கவியோகி சுத்தானந்த பாரதி, கவிஞர் சுரதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வாலிபக் கவிஞர் வாலி, ஈரோடு தமிழன்பன், கவிஞர் அ.முத்துலிங்கம், மு.மேத்தா, உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், பிறைசூடன், பழனிபாரதி, நா.முத்துக்குமார், வித்தகக் கவிஞர் பா.விஜய், கபிலன், விவேகா, மனுஸ்ய புத்திரன்,சல்மா,இயக்குனர் சீனுராமசாமி,இயக்குனர் லிங்குசாமி என நீளும் இப்பட்டியலில் பிரபல இலங்கை கவிஞர், தமிழ் திரைப்படப் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிய “திருக்குவளை சூரியன்” என்ற கவிதையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நூலின் வெளியீட்டு விழா கலைஞர் நினைவு நாளான 07/8/2024 புதன்கிழமை காலை முதலமைச்சர் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட திராவிடக் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பெற்றுக்கொண்டார்.

இத்தொகுதியின் அறிமுக விழா கலைஞர் அரங்கில் அதே தினம் மாலை 6.00மணிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புக் கவிஞராக அழைக்கப்பட்ட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்குத் தமிழ் நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் சிறப்புப் பிரதி வழங்கி பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார்.

இது பற்றி நாம் அவரிடம் கேட்ட போது..

இலங்கையில் அதிகமான தமிழ் கவிஞர்கள் வாழும் மாகாணம் கிழக்கு மாகாணம். நாட்டார் பாடலை நயம்படப் பாடக்கூடியவர்கள் எம்பிராந்திய மக்கள்.
இங்கு மீனே பாடும். நான் பாடுவதில் ஆச்சரியம் இல்லை.

என் முற்றத்திலும் என் ரத்தத்திலும் கவிதை ஊறிக்கிடந்ததால்தான் நானும் கவிஞனானேன்.

என் மானசீக குரு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் கவிதைகளால் ஆகர்சீகப்பட்டு 1997 ஆம் ஆண்டுக் கவிதை உலகுக்குள் நுழைந்தேன்.

என் கவிக்குழந்தை பருவத்தில் கவிப்பேரரசு அவர்களின் கவிதைகளை நடைவண்டியாய் எண்ணி நடைபழகியவன் நான் என்பதை என்றுமே மறவேன்.

2012 இல் “நான்” திரைப்படத்தில் நான் பாடலாசிரியராய் அறிமுகமானேன்.
என்னுள் நம்பிக்கை விதையை விதைத்து, நான் அழும்போதெல்லாம் என்னைத்தேற்றி, எனக்குள் இருக்கும் என்னைக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தது கவிப்பேரரசு எழுதிய “இதுவரை நான்” என்றால் மிகையில்லை.

2013 இல் வெளிவந்த எனது “பாம்புகள் குளிக்கும் நதி” கவிதை நூலுக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் வாழ்த்துரை வழங்கியிருந்தார்.

2024 இல் இன்று அவர் தொகுத்திருக்கும் கலைஞர் அவர்களது வரலாற்று கவிதை நூலில் எனது கவிதையும் இடம்பெற்றுள்ளது.

இது சிலரை பொருத்தவரை இது சாதாரணமாகக்கூடத் தெரியலாம். ஆனால் என்னைப்பொருத்தவரை வாழ்நாள் சாதனையாகக் கருதுகின்றேன்.

இலட்சத்துக்கு அதிகமான கவிஞர்கள் இருக்கும் தமிழ் இலக்கியச் சூழலில் 100 கவிஞர்களுக்குள் நானும் உள்வாங்கப்பட்டிப்பது எனது 27 ஆண்டுகால அயராத உழைப்புக்கு கிடைத்த பெரும் பரிசாகவே நான் பார்க்கின்றேன்.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்புப் பிராந்தியத்தில், அம்பாரை மாவட்டத்தில் அமைந்துள்ள பொத்துவில் எனும் ஒரு சாதாரணக் கிராமத்தில் பிறந்த ஒரு சாமன்ய மனிதனுக்கு இது சாதனை அல்லாமல் வேறென்ன..?
என்று அஸ்மின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here