கிரிக்கெட் நிறுவனத்தினால் போட்டிகள் தொடர்பில் எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் நான் முதலில் மன்னிப்புக் கோருகிறேன். நாம் சிறப்பாக விளையாடுவோம் என அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். நாம் தோல்வியடைந்தமை குறித்து கவலையடைகிறோம்.
நாம் எப்போதும் சிறந்த வகையில் எமது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என நினைக்கிறோம்.
எமக்கு கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து எந்தவித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நாம் தோல்வியுறும் சந்தர்ப்பங்களில் எம்மை விட வயது குறைந்தோராயினும் கூட ஆறுதலாக இருப்பதை விரும்புகிறோம்.
நாம் தோல்வியுற்றபோது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இந்தியாவுக்கு வந்து எங்களோடு கலந்துரையாடினார்கள். எமக்கு ஆதரவாக இருந்தார்கள். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டார்.
நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். அவ்வாறான கருத்துகளை வெளியில் வந்து கூற முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒருவரால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் நான் பதிலளிக்க விரும்பவில்லை. உள்நாட்டில் திறமையான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டுப் பயிற்சியாளர் ஒருவருக்கு மிகப்பெரிய தொகை வழங்கப்படும்போது உள்நாட்டில் உள்ளவருக்கும் அவ்வாறு வழங்கலாம் என்பதே எனது நிலைப்பாடு. ஏனென்றால் ஒப்பிட்டு ரீதியில் இருவருமே ஒரே மாதிரியான பங்களிப்பையே வழங்குகிறார்கள். கிரிக்கெட் போட்டியின் போது நாம் முன்னர் திட்டமிட்டதைக் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. அப்போதைய கள நிலைவரங்களைக் கொண்டே நாம் முடிவெடுக்கிறோம்.