பொசன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள்!

0
8

இன்று உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் பொசன் தினத்தைக் கொண்டாடுகின்றனர். வெசக் தினத்தையடுத்து வருவதே பொசன் தினமாகும். இலங்கைக்குச் சங்கமித்தை வௌ்ளரச மரக்கிளையுடன் வருகைத் தந்த தினமே பொசன் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

அதிகப் பௌத்தர்கள் செறிந்து வாழும் இலங்கையில் மிகவும் பக்திப் பூர்வமாகக் கொண்டாடப்படும் ஆன்மீகத் தினங்களில் பொசனும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

பொசன் பெளர்ணமி பெளத்த மதத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள தினம். நேபாளத்தின் லும்பினி என்னும் இடத்தில் அரச குடும்பத்தில் இளவரசனாகப் பிறந்த சித்தார்த்தர் அவருடைய ஜாதகத்தில் குறிப்பிட்டிருந்தமைக்கமைவாக இருபத்தொன்பதாவது வயதில் துறவறம் பூண்டார். புத்தகயாவில் தியானத்தில் ஈடுபட்ட அவர் ஞானம் பெற்று புத்தரானார்.

அரச மரத்தின் கீழ் தவத்தில் இருந்தபோது ஞானம் பெற்றமையினால் அவருக்குப் போதி மரத்து மாதவன் என்றொரு பெயரும் உள்ளது.

அத்துடன் அரச மரத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் இடையில் நெருக்கமான உறவும் ஆரம்பமானது.

ஞானம் பெற்ற சித்தார்த்தர் பௌத்த மதம் குறித்துப் பல இடங்களைப் போதிக்க ஆரம்பித்தார். அவ்வாறு அவர் போதித்த போது வாசனாரி என்னுமிடத்தில் ஐந்து சீடர்களைத் தெரிவு செய்து பௌத்த மதக் கோட்பாடுகளை விளக்கி பௌத்த சமயத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கான வித்தையிட்டார்.

தொடர்ந்து புத்தப்பெருமானின் போதனைகளைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் பௌத்த மதத்தைத் தழுவினர்.

கருணை நிறைந்த, ஆசை துறந்த வாழ்வே அமைதிக்கு வாழ்வுக்கு நிம்மதியை தரும் என்ற புத்த பெருமானின் போதனையைக் கேட்ட போர் வேட்கை கொண்ட அசோக சக்கரவர்த்தியே பௌத்தராக மாறினார் என்கிறது வரலாறு.

அசோக சக்கரவர்த்தியின் பௌத்த பற்று இலங்கைக்குப் பௌத்த சமயம் பாதம் பதிக்கக் காரணமாகியது.

அசோக சக்கரவர்த்தியின் குடும்பம் முழுவதும் பௌத்த சமயத்தைத் தழுவிக்கொள்ளத் துறவறம் பூண்ட அவருடைய மகள் சங்கமித்தை தனது சகோதரன் துணையுடன் இலங்கைக்கு வௌ்ளரச மரக்கிளையுடன் பாதம் பதித்தார்.

அதுவே இலங்கையில் பௌத்த சமயத்தின் ஆரம்பம். இலங்கையைப் போன்றே ஆசிய கண்டத்தின் மியான்மார் (பர்மா), சிங்கப்பூர், மலேசியா, திபெத், சீனா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பௌத்த மதம் மிக வேகமாகப் பரவியது.

பௌத்த சமயத்தின் அடையாளமாக இன்று பாரிய விருட்சமாக வளர்ந்துள்ள சங்கமித்தை கொண்டு வந்த வௌ்ளரசு மரக்கிளை அநுராதபுரத்தின் மகாமேகவண்ண பூங்காவில் நடப்பட்டுள்ளது.

ஶ்ரீ மாபோதி என்றழைக்கப்படும் இவ்வௌ்ளரசு விருட்சத்தில் பொசன் தினத்தில் விசேட சமய நிகழ்வுகள் நடைபெறும்.

இது கிமு 288 ஆம் ஆண்டில் நடப்பட்டதாக இலங்கை வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

மனிதனால் நடப்பட்டதும், அவ்வாறு நடப்பட்ட காலம் அறியப்பட்டதுமான, மரங்களில், உலகிலேயே மிகப் பழமையான மரம் இதுவே எனச் சொல்லப்படுகிறது. பிக்குனியான சங்கமித்தை கொண்டு வந்த அம்மரக்கிளையைத் தேவ நம்பிய தீசன் நட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here