நாட்டுக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் திருகோணமலையில் காணாமல் போயுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி நாட்டுக்கு வருகை தந்த 25 வயதுடைய டேமர் எமிடாய் என்ற இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியே திருகோணமலைக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாட்டுக்கு அமைய திருகோணமலை உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவர் இணையவழி ஊடாகத் திருகோணமலையிலுள்ள ஹோட்டலில் அறை ஒன்றை முன்பதிவு செய்து, 22ஆம் திகதி அங்குச் சென்று தங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் 26ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து, ஹோட்டலின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
காணாமல் போன சுற்றுலாப் பயணி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணி தொடர்பில் தகவல் அறிந்தோர் +972508899698 என்ற வட்ஸ் அப் இலக்கத்திற்கு அல்லது sar@magnus.co.il மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிக்க முடியுமென மேக்னஸ் என்ற சர்வதேச தேடல் மற்றும் மீட்பு அமைப்பு சமூக ஊடகங்களில் பதிவொன்றை பகிர்ந்து கேட்டுக்கொண்டுள்ளது.