இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். எனவே, அந்த விடயத்தில் நாங்கள் தலையிடுவதில்லை எனச் சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இருந்து நிதியைப் பெற்று, பகல் – இரவு போட்டிகளை நடத்தும் திறன் கொண்ட மற்றொரு மைதானத்தை நிர்மாணிக்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கிண்ணம் போன்ற போட்டிகளை ஒரே நாட்டில் நடத்துவதற்கு, பகல் – இரவு போட்டிகளை நடத்தக்கூடிய சர்வதேச அளவிலான 05 மைதானங்கள் அந்த நாட்டில் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
மேலும், ஒரு மைதானத்தை நிர்மாணிப்பதன் மூலம் இந்த நாட்டில் அந்தத் தேவை பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியை இலங்கையில் மாத்திரம் நடத்தக் கூடிய வாய்ப்பைப் பெறவும் நாம் எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சுகததாச விளையாட்டு மைதானத்தைப் புனரமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்காகக் கெத்தாராம விளையாட்டு மைதானத்தைக் கிரிக்கெட் நிறுவனத்திடம் ஒப்படைத்து ஒரு பில்லியன் ரூபாவை பெற்று இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், சுகததாசவின் கீழ் நாடளாவிய ரீதியில் உள்ள விளையாட்டு வளாகங்களைக் கையேற்கும் வகையில் எதிர்காலத்தில் சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாரிய விளையாட்டு விழாவொன்றை நடத்தவும் விளையாட்டு அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, ஒரு குறிப்பிட்ட ஸ்திரநிலைக்குக் கொண்டு வருவதன் மூலம் இவை அனைத்தும் செய்யப்படுகிறது. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான வேலைத்திட்டம் பெரும் உதவியாக இருந்தது. பொருளாதார ஸ்திரத்தன்மை உறுமய திட்டம், சுற்றுலாத் துறையின் ஊக்குவிப்பு மற்றும் விளையாட்டுத் துறையின் ஊக்குவிப்பு ஆகியவற்றில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.