109 ஆண்டுகளுக்குப் பின்னர் பொது மன்னிப்பு!

0
3

பிரித்தானிய ஆட்சியாளர்களால் நியாயமற்ற விதத்தில் தூக்கிலிடப்பட்ட கெப்டன் எட்வர்ட் ஹென்றி பேதிரிஸுக்கு, 109 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனாதிபதியினால் மரணத்துக்குப் பின்னரான பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (12)வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்தப் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய ஆளுநர் ரொபர்ட் சாமர்ஸ் வெளியிட்ட பிரகடனத்தின் மூலம் இராணுவ நீதிமன்றத்தின் நியாயமற்ற விசாரணைக்குப் பிறகு 1915ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி ஹென்றி பேதிரிஸ் தூக்கிலிடப்பட்டார்.

இனக் கலவரத்தைத் தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கொல்லப்பட்ட போதிலும், அந்தக் குற்றச்சாட்டுப் பொய்யானது எனப் பின்னர்த் தெரியவந்தது.

அந்தவகையில், இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதற்கும், அது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, அவருக்கு நீதி வழங்குவதற்காக அமைச்சரவைக்குப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்குக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1888 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி காலியில் பிறந்த ஹென்றி பேதிரிஸ், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் முன்னணி சமூக ஆர்வலராகவும், அன்றைய தற்காப்புப் படையிலும் கொழும்பு நகரப் பாதுகாப்புப் படையிலும் பணியாற்றியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here