நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் இரத்து!

0
6

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகப் புதுடெல்லியை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதி வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவி பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட இந்திய பிரதமர், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை ஏற்பாடு செய்யும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருந்தார்.

இவ்வாறு ஏற்பாடுகள் முன்னெடுத்து வந்த நிலையில், இந்திய பிரதமர் தனது இலங்கை விஜயத்தை ரத்துச் செய்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களைக் கைது செய்ய இலங்கை கடற்படை முயற்சித்த தருணத்தில், படகொன்று நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஒருவர் காணாமல் போனதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றன.

இதையடுத்து, இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரம் இராஜதந்திர மோதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சு, புதுடெல்லியிலுள்ள இலங்கை பதில் உயர் ஸ்தானிகர் பிரியங்க விக்ரமசிங்கவை அழைத்துத் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடனும் கருணையுடனும் கையாள வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கை அரசாங்கத்திடம் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here