அரச துறையைச் சேர்ந்த சிலர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள போதிலும், 7 இலட்சத்து 8,231 ஓய்வூதியம் பெறுநர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 24 அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கும், அஞ்சல் திணைக்களத்துக்கும் 28.5 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 99.5 சதவீதமானோர் இன்றைய தினம் ஓய்வூதியக் கொடுப்பனவைத் தாமதமின்றிப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களில் பிரதேச செயலகங்கள் இயங்காமையினால், சுமார் 13,000 பேர் மாத்திரம் தாமதமாக நாளைய தினம் (11) தங்களது ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வார்கள் என ஓய்வூதியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் குறிப்பிட்டுள்ளார்.