கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களுக்கும் மட்டக்களப்பு மாநகரச் சபை எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைப் பகுதிக்குள் முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தரிப்பிடங்கள் பெற்றுக் கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், மட்டக்களப்பு மாநகரச் சபையால் உருவாக்கப்பட்டுள்ள முச்சக்கர வண்டி சங்கங்கள் தொடர்பான யாப்பு விதிகள் தொடர்பாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரி சங்க நிர்வாகிகளால் இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்படிருந்தது. இதன்போது சாரதிகளின் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெஸ்டினா முரளிதரன் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன் மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சங்க தலைவர் ஜெயப்பிரகாஸ், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் அருண் திருநாவுக்கரசு, இளைஞர் அணி செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாநகரச் சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.