வீட்டினுள் கொள்ளையடிக்க நுழைந்த கும்பலொன்று அவ்வீட்டில் வசித்துவந்த வயோதிப தம்பதியரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் 74 வயதுடைய வயோதிபப் பெண் உயிரிழந்ததோடு, பெண்ணின் கணவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எஹலியகொடை, அராபொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
அந்த வீட்டில் வயோதிப கணவரும் (வயது 76) மனைவியும் மட்டுமே வசித்துவருகின்றனர். அவர்களது இரு பிள்ளைகள் வெளிநாட்டிலும், ஒரு மகள் களனி பிரதேசத்திலும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டுக்குள் நுழைந்த கும்பல், வயதான மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்ததோடு, வீட்டின் குளியலறைக்கு அருகில் கணவரையும் தாக்கி, கை, கால்களைக் கட்டியதாகவும், இத்தாக்குதலில் கணவரும் இறந்துவிட்டதாகக் கருதிய பின்னர்க் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், சொத்துக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே வீடு புகுந்து இந்தக் கும்பல் தம்பதியரை தாக்கிக் கொலை செய்திருக்கக்கூடும் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
படுகாயமடைந்து எஹலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணின் கணவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் எஹலியகொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.